SiteMap
 தமிழ் இசைச் சங்க வரலாறு  

 
தமிழ் இசைச் சங்கம் : தோற்றம் : 1943

உலக நாடுகள் பலவற்றுள்ளும் பழமையும் நாகரீகமும் வாய்ந்த நாடுகளுள் நம் தமிழகமும் ஒன்று என்பது நமக்குப் பெருமை அளிப்பதாகும். இந்த நாட்டில்தான் இயல், இசை, நாடகம், சிற்பம், ஓவியம், கட்டடக்கலை, போன்ற நுண் கலைகள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு முன் சிறந்து வளர்ந்து வந்திருக்கின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் இயற்றப்பட்ட தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். இந்நூலில் கூறப்பட்டுள்ள இசைக்கலையின் மரபினைக் காணும்போது அக்காலத்திற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே இயல், இசை, நாடகம் போன்றக் கலைகள் இம்மண்ணில் செழித்து ஓங்கியிருப்பதை எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

சங்க காலத்திற்குப் பின் இரண்டு, மூன்று, ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தேவார மூவரும், திவ்வியப்பிரபந்தம் அருளிய ஆழ்வார்களும், முத்துத்தாண்டவர், அருணாசலக்கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணகிரிநாதர், வள்ளலர், கோபாலகிருஷ்ணபாரதியார், மகாகவி பாரதியார், போன்ற எண்ணற்ற பெரியோர்கள் நமக்கு அளித்துச் சென்ற இசைப் பாடல்கள் பல ஆயிரம்.

ஆயினும் புகழ்மிக்க மூவேந்தர் ஆட்சிக்குப்பின் தமிழ்நாடு 15-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பிற மொழியாளர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்ததை வரலாறு நமக்குக் கூறும்.

இதன் காரணமாக இசையரங்குகளில் வேற்று மொழிப் பாடல்களே அதிகம் இடம் பெற்றன. ஆனால் கோவில்களில் மட்டும் ஓதுவார்களால் திருமுறை ஓதும் நிலையில் தமிழ் இசைப் பாடல்கள் பெயரளவில் இடம்பெற்றன.

இந்த நிலையைக் கண்ட செட்டிநாட்டரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் தமிழ்நாட்டில் அக்காலத்தில் புகழுடன் வாழ்ந்த பெரு மக்களான சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் டாக்டர் ஆர்.கே.சண்முகம் செட்டியார்,சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி, கல்கி, டி.கே.சி., சி.என்.அண்ணாதுரை போன்ற பெருமக்கள் ஆதரவுடன் தற்பொழுதைய தமிழிசைச் சங்கத்தினை 1943-ல் சென்னையில் நிறுவினார்கள்.

1929-ல் தனி் ஒருவராகவே சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தினை நிறுவி 1932-ல் தோற்றுவித்த இசைக் கல்லூரியினை பல்கலைக்கழகத்துடன் இணைத்த செய்தியினின்றும் செட்டிநாட்டரசர் இசையின் மேல் கொண்டிருந்த ஆர்வம் தெள்ளிதின் புலப்படும்.

தமிழிசைச் சங்கத்தை தோற்றுவித்த செட்டிநாட்டரசர்,
" தமிழ்நாட்டில் நடைபெறும் இசையரங்குகளில் தமிழ்ப் பாடல்களே அதிகமாக இடம்பெற வேண்டும். தமிழ்நாட்டில் தமிழிசை பரவவேண்டுமென்பது வேறெந்த மொழிக்கும் இயக்கத்திற்கும் விரோதமானது அல்ல. மிக மிக நியாயமான குறிக்கோளாகும் " என்று சங்கத்தின் குறிக்கோளினை விளக்கினார்கள்.

 
அரசரின் குறிக்கோள்
(தனது கைப்பட எழுதியது)
Top
விதிமுறைகளும் நிபந்தனைகளும் | Font Help | வலையக வடிவமைப்பு 1024 x 768 திரை பயன்பாட்டுக்கு | வலையக வடிவமைப்பு செர்ரிடெக் சொல்யூசன்ஸ் லிமிடெட்