| தமிழ் நாடெங்கும் தமிழிசை பரவ வேண்டுமென்ற குறிக்கோளுடன் 1943-ல் தொடங்கப் பெற்ற தமிழிசைச் சங்கத்தின் ஆதரவில் 1944-ல் தமிழிசை மாலை நேரக் கல்லூரி தோற்றுவிக்கப்பெற்றது. தொடக்க காலத்தில் இக்கல்லூரியில் கீழ்வேளுர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும், தஞ்சை கே.பி.கிட்டப்பா அவர்களும் முதல்வராகவும், பேராசிரியராகவும் பணிபுரிந்தனர்.
1952-ல் புதிய கட்டடத்திற்கு கல்லூரி மாற்றப்பட்டவுடன் மாணாக்கர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
அரியக்குடி இராமானுஜ அய்யங்கார், பி.எஸ்.வீருசாமி பிள்ளை, பழனி சுப்பிரமணிய பிள்ளை, திருமதி எம்.எல்.வசந்த குமாரி போன்ற இசைவாணர்கள் இக்கல்லூரியில் வருகை தரும் பேராசிரியராகப் பணிபுரிந்து பெருமை சேர்த்துள்ளனர்.
1995-ல் மதிப்பியல் செயலராகப் பணி ஏற்ற டாக்டர் ஏ.சி.முத்தையா அவர்களின் பெருவிருப்பிற்கேற்ப அப்பொழுது முதல் பகல் நேரக் கல்லூரியும் தோற்றுவிக்கப்பெற்றது. திருப்பாம்புரம் சோ.சண்முகசுந்தரம் அவர்களை இயக்குநராகவும், டாக்டர் பி.டி.செல்லத்துரையை முதல்வராகவும் ஏறக்குரைய 25 சிறந்த ஆசிரியர்களின் அயராத முயற்சியுடனும் கல்லூரி நடைபெற்று வருகிறது. பகல் நேரக் கல்லூரியில் தற்பொழுது 200 மாணவர்களும் மாலை நேரக் கல்லூரியில் 350 மாணவர்களும் - தேவாரம், திவ்யப்பிரபந்தம் - வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், நாகசுரம், தவுல் பரதநாட்டியம் போன்ற துறைகளில் பயின்று வருகின்றனர்.
தமிழக மாணவர்கள் மட்டுமன்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளினின்றும் மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர்.
கல்லூரியின் பாட திட்டம் தமிழக அரசினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்பாட திட்டத்தையே அரசு இசைக் கல்லூரிகளிலும் ஏற்றுப் பயிற்றுவிக்கின்றனர் என்பது இக்கல்லூரிக்குப் பெருமை சேர்ப்பதாகும். பாடதிட்டத்துடன் மட்டுமன்றி தேர்வுகளும் தேர்வாளர்களும் அரசு கல்லூரிகளின் நடவடிக்கைகளுக்கேற்ப நடைபெற்று வருகின்றன.
இக்கல்லூரியில் பயின்று பட்டயம் பெற்ற மாணவர்களில் பலர் ஆங்காங்கே பள்ளிகளிலும் இசைப் பள்ளிகளிலும் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர் என்பதும் மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
இக்கல்லூரியில் பள்ளி மாணவர்களும் அலுவலகம் செல்லும் சிலரும் பயின்று பயன் பெற்றுள்ளனர். |